செவ்வாய், 5 ஜூலை, 2016

சிங்கள மாணவர்களின் வகுப்புதடையை நீக்க கோரி வளாகத்தில் சுவரொட்டிகள்

மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தற்காலிக வகுப்புத் தடையை உடனடியாக நீக்குமாறு கோரும் சுவரொட்டிகள்  வளாகத்தின் பல இடங்களிலும் செவ்வாய்க்கிழமை (ஜுலை 05, 2016) ஒட்டப்பட்டுள்ளன.
கிழக்கு  பல்கலைக்கழகத்தின்  வந்தாறுமுலை  வளாகத்தில்  தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டதையடுத்து ஏட்டிக்குப் போட்டியான இரண்டு ஆர்ப்பாட்டங்கள் கடந்த மே மாதம் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் இடம்பெற்றன.

தமிழ் மாணவர்களினால்  வந்தாறுமுலை வளாகத்தில்    மே  18ம் திகதி முள்ளிவாய்கால் தினம் நினைவு கூரப்பட்டது.

இந்நிகழ்வு தொடர்பான படங்களை தனது  முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்திருந்த தமிழ் மாணவன் மீது சிங்கள மாணவர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதாக பொலிஸிலும்   புகார்  பதிவாகியிருந்தது.

சம்பவத்துடன்  தொடர்புடைய மாணவர்கள் மீது  நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி தமிழ் மாணவர்கள்   வளாகத்தின் முன்பாக ஒன்று கூடி  ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஏற்கெனவேயும் சிங்கள மாணவர்களில் சிலர் இன ரீதியான செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாகவும்  தமிழ் மாணவர்கள்  சுட்டிக் காட்டினர்.

தமிழ் மாணவன் மீதான தாக்குதல்  தொடர்பாக இரு சிங்கள   மாணவர்களுக்கு   பல்கலைக்கழக நிர்வாகத்தினால்  கடந்த 27.05.2016 முதல்   விரிவுரைகளுக்கு வருவது தடை விதிக்கப்பட்டது.

இந்த தடையை  நீக்கக் கோரி  சிங்கள மாணவர்கள்  27.05.2016 அன்று  வளாகத்தின் பிரதான வாயிலை மூடி முற்றுகையிட்டு  ஆர்ப்பாட்டம்  செய்தனர்.

சிங்கள  மாணவர்களின்  ஆர்பாட்டம்  காரணமாக   சுமார்  3  மணித்தியாலங்கள்  விரிவுரையாளர்கள் உட்பட எவரும்  வளாகத்திற்கு உள்ளேயிருந்து வெளியேற முடியாத நிலை காணப்பட்டது.

இதன் பின்னர் இடைநிறுத்தப்பட்ட கல்வி நடவடிக்கைகள் கடந்த 09.06.2016 தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டன.

தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் இரு சிங்கள மாணவர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணையும் தற்காலிக வகுப்புத் தடையும் தொடர்ந்து இடம்பெறுகின்றது.

இதனை மாணவர்கள் இருவர் மீதான வகுப்புத் தடையை உடனடியாக நீக்கக் கோரியே இப்பொழுது சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate