சனி, 7 நவம்பர், 2015

அரசியல் கைதிகள் தொடர்பில் அரசு நழுவல் போக்கினை கடைப்பிடிக்கின்றது: யோகேஸ்வரன்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் புதிய அரசாங்கம் நழுவல் போக்கினையே கடைப்பிடிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட வெலிக்காக்கண்டி கிராம அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“வெலிக்காக் கண்டி கிராம மக்கள் கடந்த 1990 ஆண்டு முதல் தொடர்ந்து பல இடம்பெயர்வுகளை சந்தித்துள்ளதை நான் அறிவேன். எமது எல்லைப்புற கிராம மக்கள் தமது இருப்புக்களைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருக்க வேண்டும். நீங்கள் இந்த இடங்களை விட்டு வெளியேறும் போது வேறு இனத்தாரை குடியமர்த்துவதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
இந்த பிரதேசங்களுக்கான அபிவிருத்திகள் தொடர்பாக நாங்கள் கூடிய கவனம் செலுத்தவுள்ளோம்.
இடம்பெயர்ந்து வெளியிடங்களில் வாழும் மக்கள் மீள குடியேறும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எமது நாட்டை ஆட்சி செய்த ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தமிழ் தலைமைகளை ஏமாற்றுவது வரலாறாகவே காணப்படுகிறது. அந்த வகையில் மைத்திரி ரணில் தலைமையிலான நல்லாட்சிக்கான அரசாங்கமும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நழுவல் போக்கினையே கடைப்பிடிக்கிறது.
இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்த தீர்வினைப் பெற்றுக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் மைத்திபால சிறிசேசனவுக்கு வாக்களித்து ஆட்சி மாற்றத்தைக் ஏற்படுத்தினார்கள்.
கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கையெடுக்காவிடின் தமிழ் மக்கள் அவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படும் என்றார்.




Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate