பறைமேள கூத்து என்பது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் காணப்படும் அதிசிறப்பு வாய்ந்த கலை வடிவம்.அதனை சாதி ஆதிக்கம் காரணமாக இழந்துவிடுவது என்பது மிகவும் வெட்ககேடான விடயம் என கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி கே.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பறை மேள கலைஞர்கள் மற்றும் கிழக்கு பல்கலைகழக மாணவர்களும் இணைந்து வழங்கிய பறைமேள கூத்து ஆற்றுகையும் காட்சிப்படுத்தலும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் வளாகத்தில் நடைபெற்றது.
தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றாக கருதப்படும் பறைமேளக்கூத்துக்கலையை புதுமையான பாணியில் இளந்தலைமுறையினருக்கு கொண்டுசெல்லும் முயற்சியாக இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
நோர்வே தூதரகம் மற்றும் மொபிடல்,சேவாலங்க நிறுவனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட இந்த நிகழ்வில் பேராசிரியர் சி.மௌனகுரு உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பறை மேள இசையானது தமிழர்களின் வாழ்வில் இடங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது.ஆலய நிகழ்வானாலும் இன்ப துன்ப நிகழ்வானாலும் இந்த கலை இரண்டறக்கலந்த நிலையிலேயே இருந்துவந்தது.
எனினும் இந்த கலையும் கலைஞர்களும் சாதிய அடிப்படையில் ஒதுக்கப்படுவதன் காரணமாக அரிய இந்த கலை தமிழர்கள் மத்தியில் இருந்து மறைந்து செல்லும் நிலையே ஏற்பட்டுவருகின்றது.
இதனை கருத்தில் கொண்டு இந்த கலை எதிர்கால சந்ததிகள் அழிவிடமால் கொண்டுசெல்லவும் சாதியம் என்ற வேலியில் இருந்து அகற்றவும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தினால் இந்த நிகழ்வுகள் நடாத்தப்படுகின்றன.
இதன்போது பல்வேறு விதமான பறை மேள இசைகள் இசைக்கப்பட்டு பறை மேள கூத்துகளும் ஆடப்பட்டதுடன் தமிழர்களின் பாரம்பரிய கலையான இப்பறை மேள கூத்துக்கலையினை சிறந்த முறையில் முன்கொண்டுசெல்லும் கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வின்போது பாரம்பரிய கூத்துக்கலையின் வடிவங்கள் தாங்கிய மாணவர்களின் ஓவியக்கண்காட்சியும் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.

0 facebook-blogger:
கருத்துரையிடுக