ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

படுவான்கரைக்கும் எழுவான்கரைக்குமான இணைப்பாய் அமைந்த படகுத்துறைகள்

(தி.லலிதன்)
படுவான்கரைக்கும் எழுவான்கரைக்குமான இணைப்பாய் அமைந்த படகுத்துறைகள்...
மட்டக்களப்பு வாவியினால் இருகூறாக்கப்படும் மீன்பாடும் தேனாட்டின் மேற்குபுறமாய் அமைந்த பெருநிலப்பகுதி படுவான்கரை(சூரியன் படுவதால் அல்லது மறைவதால்) எனவும் சூரியன் உதிக்கும் கடலை எல்லையாக கொண்ட பகுதி எழுவான்கரை எனவும் அழைக்கப்படுதல் வழக்காறு.இந்த படுவான்கரையினையும் எழுவான்கரையினையும் நிலத்தினூடு இணைப்பவையாக இருப்பவை வலையிறவு பாலம் , பட்டிருப்பு பாலம் மற்றும் மண்முனைப்பாலம் ( கடைசியாய் அமைக்கப்பட்டது) என்பவையாகும்.
மட்டக்களப்பின் நிலப்பகுதி நீண்டதாயும் மேற்குறித்த பாலங்களை அடைவதில் மக்களுக்கு காணப்பட்ட சிரமங்களின் காரணமாயும் இருகரைகளையும் இணைக்கும் முகமாக படகுத்துறைnகள் ஏற்படுத்தப்பட்டன.அவ்வாறு பிரபல்யமாக இருந்த படகுத்துறைகளாக மண்முனை-அரசடித்தீவு , குருக்கள்மடம்-அம்பிளாந்துறை ,களுதாவளை-பழுகாமம் , குருமண்வெளி-மண்டூர் துறைகள் முதலானவை காணப்பட்டன.இவற்றில் பாலம் அமைத்ததன் காரணமாக மண்முனை துறையும் இனப்பிரச்சனை காரணமாக களுதாவளை துறையும் வழக்கொழிந்து போயின.

ஏனைய இரு துறைகளும் இன்றும் புழக்கத்திலுள்ளன.இங்கு படகேறும் இடங்களை "துறையடி"என அழைப்பது மட்டக்களப்பின் பேச்சு வழக்கு.இந்த துறையடியில் பயணம் செய்யும் மக்கள் இளைப்பாறுவதற்காயும் வாவி மீன்பிடி மீனவர்கள் தாங்கள் பிடித்த மீன்களை பிரிப்பதற்கும் விற்பனை செய்வதற்குமாய் அமைக்கப்பட்ட கட்டடங்கள் "அம்பலங்கள்" என அழைக்கப்பட்டன.மேற்படி சட்டபூர்வமாய் அமைக்கப்பட்ட துறைகளை விட சில காலங்களில் தற்காலிகமாக அமைக்கப்பட்டு மக்களால் பயன்படுத்தப்பட்ட துறைகளும் இருந்தன.அவற்றினை நாங்கள் "கள்ளத்துறைகள்"என அழைப்போம்.இதற்கான சிறந்த உதாரணம் தேற்றாத்தீவு குடியிருப்பு கிராமத்தை அண்டிக் காணப்பட்ட "குடியிருப்பு துறை".
இதில் பயணம் செய்வதற்கு பயன்பட்ட பயணக்கலங்கள் மூன்று விதமானவை.
துடுப்புக்களை கொண்டு வலிக்கப்பட்ட சிறிய மீன்பிடி படகுகள்.(canoes ).

இயந்திரப்படகுகள் (boats ).
பெரிதான பாதைப்படகுகள். ( ferries)
எழுவான்கரையின் மரக்கறி உற்பத்திகள் பாலையடிவட்டை , மண்டூர் சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படுவதற்கும் படுவான்கரை உற்பத்திகளான தயிர் , அரிசி போன்றவற்றை எழுவான்கரைக்கு கொண்டு வருவதற்கும் பிரதான மார்க்கமாக இருந்தவை இந்த படகுப்பாதைகளே.மிகச்சுவாரிசியம் மிக்க அனுபவங்களாக மாப்பிள்ளை , பெண் அழைப்பு படலங்களும் ( "வைதேகி காத்திருந்தாள்"படத்தில் இடம்பெறும் "மேகம் கறுக்கையிலே புள்ள தேகம் குளிருதடி" பாடலை நினைப்பூட்டுவது) தேர்தல் காலத்தில் வாக்குப்பெட்டி மாற்றுதல்களும் பொதுப்பரீட்சை வினாத்தாள்கள் பரிமாறல்களும் இடம்பெற்றன .
இந்த துறையடிகள் மூலம்.போக்குவரத்தினை தவிர நன்னீர் மீன்களை விற்பனை செய்யும் இடங்களாயும் இந்த துறையடிகள் பயன்பட்டன.இந்த துறையடிகளில் விற்கப்படும் மீன்களுக்கு பிரத்தியேகமான சுவையுண்டு.சனி , ஞாயிறு தினங்களில் மாமாக்களுடன் போய் விரால் , செத்தல் , கிளக்கன் மீன்களை வாங்கி சமையல் செய்த நினைவுகள் பசுமையாய்.படுவான்கரை போராளிகளின் பகுதியாயும் எழுவான்கரை படையினரின் பகுதியாயும் காணப்பட்டதால் இனப்போரியல் வரலாற்றிலும் இந்த துறையடிகள் தங்களை தடம்பதித்துக் கொண்டன.
போராளிகள் இந்த துறையடிகள் மூலமாயே ஊடுருவலினை மேற்கொண்ட காரணத்தினால் அடிக்கடி மோதல்கள் இடம்பெறும் பகுதியாயும் இவைகள் காணப்பட்டன.ஆற்றின் நடுவே பயணிக்கையில் இருதரப்பாருக்கும் இடையில் நடைபெறும் மோதல்களில் சிக்குண்டு இறந்த பொதுமக்களின் உடலங்களும், 1990 இற்கு பிற்பட்ட காலத்தில் மட்டக்களப்பின் துறையடிகள் நெடுகிலும்கரையொதுங்கிய அனாமேதய சடலங்களும் "மரணத்துள் வாழ்வோம்" காலத்தின் மாறாத பதிவுகள்.
படுவான்கரைக்கும் எழுவான்கரைக்குமாய் அதிகரிக்கப்பட்ட பேருந்து சேவைகளும் மக்களின் தனிப்பட்ட வாகனங்களின் அதிகரிப்பும் இந்த "துறையடி" போக்குவரத்தினை மட்டுப்படுத்திய அளவிற்கு கொண்டு போயுள்ளன.
எனினும் மண்டுர் - குருமண்வெளி துறையும் குருக்கள்மடம்- அம்பிளாந்துறை துறையும் இன்றும் தீவிரமாய் இயங்கி கொண்டுள்ளன.எனினும் மேற்குறித்த துறைகளுக்கு குறுக்கே பாலங்கள் அமைக்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றியளிப்பின் இந்த படகுத்துறை போக்குவரத்தும் அடுத்த தலைமுறைக்கு கிட்டாது போகக் கூடும்
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624982

Translate