(தி.லலிதன்)
தமிழர் வாழ்வியலில் முற்றிலும் அற்றுப்போன ஒரு வழமையாக "புட்டுக்களி அவித்துப் போதல்" காணப்படுகிறது.இந்த "புட்டுக்களி அவித்துப் போதல்" என்பதன் சரியான வரிவடிவம் "பிட்டுக்களி அவித்துப் போதல்" என்பதாகும்.இந்த முறைமையின் விளக்கம் பின்வருமாறு...தமிழக்குடும்பங்களில் ஒரு பெண்பிள்ளை ருதுவானதும் அல்லது பருவமடைந்ததும் (கிராமப்புறங்களில் இதனை பெரிய பிள்ளையாதல் என்பர் ) அயலவர்களும் உறவினர்களும் நல்லெண்ணை , நாட்டு முட்டை மற்றும் எள்ளு போன்றவற்றை அன்பளிப்பாய் கொண்டு கொடுப்பர்.
ருதுவாகி பதினைந்து தினங்கள் அல்லது இருபத்தோரு தினங்களுள் அந்தப்பிள்ளைக்கு "தண்ணீருற்றுதல்" சம்பிரதாய முறைப்படி நிகழும்.
இதன் பின்னர் பெண்ணின் மாமா முறையானவர்களின் குடும்பத்தில் இருந்து உறவு முறையானவர்கள் அனைவருமாய் இணைந்து நல்லதோர் தினத்தில் பல வித பட்சணங்களையும் செய்து கொண்டு வரும் ஒரு நிகழ்வே இந்த "புட்டுக்களி" கொண்டு வரும் நிகழ்வாகும்.
இதற்கு "பிட்டுக்களி" என பெயரிடப்பட்டிருப்பினும் அங்கு கொண்டுவரப்படுவது பிட்டோ அல்லது களியோ அல்ல.மாறாக அரியதாரம், பயற்றம் உருண்டை , லட்டு முறுக்கு போன்ற பட்சணங்களே.சிலர் இந்த பட்சணங்களுக்கு மேலதிகமாய் பெண்ணுக்கான நகைகள் உடுப்புக்களும் கொண்டு செல்வர்.
இது ஒரு ஊர்வலம் போன்றே நடாத்தப்படும்.இரு பெண்கள் முன்னும் பின்னுமாய் வெள்ளை வேட்டி அல்லது வர்ணசேலை ஒன்றை குடை மாதிரி பிடித்துக் கொள்ள நடுவில் பட்சணம் கொண்டு செல்லும் பெண்கள் நடந்து செல்வர்.இதற்கு "வெள்ளை பிடித்து போதல்"என்பது சிறப்பு பெயருமுண்டு.
யாவற்றுக்கும் முன்னால் சிறார்கள் அல்லது ஆண்கள் பட்டாசுகளை வெடிக்க வைத்துக் கொண்டு செல்வர்.இதை "மாமன் வீட்டு சீர்" எனவும் அழைப்பர்.
அனேகமாக மாலை நேரங்களிலேயே இந்த நிகழ்வு இடம்பெறும்.அன்றைய இரவு பெண்ணின் வீட்டில் ஆட்டுக்கறி அல்லது நாட்டுக்கோழி கறியுடன் சீர் சுமந்து வந்தோருக்கு தடபுடலாய் விருந்து இடம்பெறும்.
இன்றைய நாகரிக உலகில் முற்றாய் மறைந்து போன வழமை இது.அயல் வீடுகளில் இருந்து கிடைத்து நான் உண்ட"புட்டுக்களி" பட்சணங்களின் சுவை இன்னும் என் நாவில்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக