சனி, 26 செப்டம்பர், 2015

சேயாவின் படுகொலையை கண்டித்து வவுணதீவில் விசேட தேவையுடையோர் ஆர்ப்பாட்டம்

பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபடும் நபர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி மண்முனை மேற்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட விசேட தேவையுடையவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தினர்.

மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட வவுணதீவு சந்தியில் இருந்து வவுணதீவு பிரதேச செயலகம் வரையில் விசேட தேவையுடைவர்கள் பங்குகொண்ட ஊர்வலம் நடைபெற்றது.

மண்முனை மேற்கு பிரதேசத்துக்குட்பட்ட விசேட தேவையுடையவர்களை ஒருங்கிணைத்த வாழ்வகம் அமைப்பினால் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது.

இதன்போது பெருமளவான விசேட தேவையுடையவர்கள் இந்த ஊர்வலத்தில் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகளே ஆஜராகாதீர்கள், நல்லாட்சியில் இவ்வாறான கயவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும், அரசியல்வாதிகளோ கொலையாளிக்கு சார்பாக செயற்பாடாதீர்கள் போன்ற கோசங்களை எழுப்பிச்சென்றனர்.

இந்த பேரணி பிரதேச செயலகத்தினை சென்றடைந்ததும் அங்கு பிரதேச செயலக கணக்காளர் கே.ஜெகதீசனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கான மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பிரதேச செயலக முன்றிலில் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட சேயாவின் படுகொலையினை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது.

இன்று சேயாவிற்கு ஏற்பட்ட நிலைமை நாளை எமது பிள்ளைகளுக்கும் ஏற்படலாம்.அதன் காரணமாக இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் இவ்வாறான குற்றவாளிகள் சமூகத்தில் தோன்றாமல் இருக்கும் நடவடிக்கையினை எடுக்கவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.

இனிவரும் காலங்களில் பெண்கள்,சிறுவர்கள் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படக்கூடாது.அதற்கான சட்டதிட்டங்களை இந்த நாட்டில் கொண்டுவரப்படவேண்டும் என்பதற்காகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக வாழ்வகம் அமைப்பின் தலைவர் எஸ்.புவிராஜசிங்கம் தெரிவித்தார்.

இதன்போது துஸ்பிரயோகங்களுக்கு எதிராக பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டதுடன் போராட்டத்தில் கலந்துகொண்டோர் பல்வேறு சுலோகங்கள் கொண்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
தமிழ் பிரதேசங்களில் சேயாவின் படுகொலையை கண்டித்து முதன்முறையாக மட்டக்களப்பிலேயே கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate