புதன், 2 மார்ச், 2016

சிறுபான்மை மக்களுடைய காப்பு புதிய யாப்பில் உறுதிப்படுத்தப்படல் வேண்டும் - கி. மா. உ ஷிப்லி பாறூக்

கடந்த மாகாணசபை அமர்வில், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசினுடைய அரசியல் யாப்பு புதிய சீர்திருத்தம் தொடர்பாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் சிறுபான்மை மக்கள் குறித்த யாப்பினுடைய சரத்துக்களை பூரணமாக தெளிவு காண்பதற்குரிய அவகாசமும் விழிப்புணர்வும் ஏற்படுத்துவதனூடாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய யாப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற முன்மொழிவினை முன்வைத்தார். 

இதன்போது உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக மாகாணசபை முறைமை உருவாக்கபட்டது. 13ம் திருத்தசட்டதினூடாக மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட்ட போதிலும் அவை முற்றுமுழுவதுமாக இதுவரை செயல்படுத்தப்படவில்லை என்பது மிகவும் கவலையான ஓர் விடயம். 

தற்பொழுது பேசப்படுகின்றன யாப்பு மாற்றதில் சிறுபான்மையினருக்கும், 13ம் திருத்தசட்டத்திற்கும் என்ன நடைபெறபோகின்றது என்ற விடயத்தில் பலத்த சந்தேகம் ஒன்று சிறுபான்மையினர் மத்தியில் எழுந்திருக்கின்றது. இந்த யாப்பு மாற்றம்பற்றி மக்கள் மத்தியில் மிகவும் தெளிவாக விழிப்புணர்வினை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இந்த மாகாணசபை அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என்பது ஓர் கவலையான விடயமாகும். சிறுபான்மை மக்களை பற்றியும் அவர்களுடைய உரிமைகளையும், நிலைப்பாடுகளையும், தேவைகளையும் பற்றி பேசுகின்ற வடக்கு, கிழக்கு மாகாணசபைகள் இதற்காக என்ன பங்களிப்பினை செய்துள்ளது என வினவினார்.

அதிகபட்ச சுயநலத்திற்காக முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ்வினால் உருவாக்கபட்ட 18வது யாப்பு சீர்திருத்தம் 19வது திருத்தசட்டதினூடக செயலிழக்கச் செய்யப்பட்டு அணைத்து சுயாதீன ஆணைக்குழுக்களும் உருவாக்கபட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதுமட்டுமல்லாது 1948ம் ஆண்டிற்கு பின் உருவாக்கபட்ட யாப்பில் சிறுபான்மையினருக்கான  ஒரு காப்பு என்ற விடயம் 1972ம் ஆண்டின் குடியரசின் யாப்பில் நீக்கப்பட்டது, அது மீண்டும் இந்த புதிய யாப்பில் உள்வாங்கப்படவேண்டும். சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கப்படும் விதத்தில் ஏதேனும் திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு 3இல் 2பெருன்பான்மை பெற்றாலும் அது செல்லுபடியற்றதாக வேண்டும் என்பது இந்த புதிய யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய வாதமாகும் என்று கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், 1948ல்உருவாக்கப்பட யாப்பில் சிறுபான்மையினருக்கானகாப்பு விடயம் கூறப்பட்டிருந்த போதிலும் கூட தனி சிங்கள சட்டம், வெட்டுப்புள்ளி, இந்தியா வம்சாவளியினரின் பிரஜாவுரிமை நீக்கப்படமை போன்ற விடயங்கள் சிறுபான்மையினருக்கு பாதிப்பினை ஏற்படுத்தியது. எனவே இவ்வாறான பாதிப்புக்கள் சிறுபான்மையினருக்கு நடைபெறும்போது புதிதாக உருவாக்கபடவிருக்கும் இந்தபுதிய யாப்பில் சிறுபன்மையினருக்கான காப்பு என்ற விடயம் உறுதியாக இருக்கும் பட்சத்தில் அதனை உயர் நீதிமன்றத்திக்கு எடுத்துசென்று அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு சிறந்த விடிவினை பெற்றுக்கொள்ள முடியும் என்கின்ற விடயம் இந்த புதிய யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டும்.

மேலும் இந்த யாப்பினுடைய சரத்துக்கள் வரைவதற்கு முன்பாக அதனைப்பற்றிய முழுமையான தெளிவினை வதிவிட பயிற்சிபட்டறைகள் மூலம்கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கும் அதே போன்று மக்கள் பிரதிநிதிகளுக்கும் வழங்கி அதனூடாக அனைவரும் தெளிவினை பெற்று உருவாக்கபட்டவிருக்கும் புதிய யாப்பு சீர்த்திருத்தத்திற்கு சிறந்த முன்மொழிவுகளை அனைவரும் ஒன்றுபட்டு முன்வைக்க வேண்டும் என்றும் வேண்டினார்.

மேலும் யாப்பு சீர்திருத்தம் என்பது வெறுமனே உடனடி பிரச்சனைக்குரிய தீர்வாக இல்லாமல் தூரநோக்குடன் 10, 15 ஆண்டுகளுக்குப் பிறகும் நாட்டினுடைய நிலைமை, பொருளாதாரம், சிறுபான்மை மக்களின் இருப்புக்கள் பற்றி தெளிவு காணமல் எவ்வாறு மக்களிடம் அபிப்பிராயத்தினை கேட்பது?   எனவே அம்மக்களுக்கு யாப்பு சீர்திருத்தம்பற்றி  தெளிவுபடுத்திவிட்டு அபிப்பிராயத்தினை கேட்கவேண்டும்,

நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நல்லாட்சிக்கு 90வீதமான சிறுபான்மை சமூகம் பங்களிப்பு செய்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் அதி உத்தம ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு 209,000 வாக்குகளை அளித்து பாரியளவில் வெற்றிக்காக கைகொடுத்து நல்லாசிக்கு வித்திட்டவர்கள் இந்த சிறுபான்மை மக்களாகும். எனவே  சிறுபான்மையினருடைய உரிமைகள், இருப்புக்கள் போன்ற விடயங்களை புதிய யாப்பில் உரிய இடத்தில் சரியாக வழங்கப்பட வேண்டுமாக இருந்தால், இந்த யாப்பு வரைதலில் சிறுபான்மையினருக்குரிய அவகாசமும், வழிகாட்டுதல்களும் கிழக்கு மாகாணசபையினால் செயல்படுத்தப்பட வேண்டும். அதனூடாக அந்த யாப்பு முன்மொழிகின்றபோது கிழக்கு மாகாண சபைக்கும், வட மாகாண சபைக்கும் சமர்பிக்கப்பட்டு அங்கு ஒப்புதல் வழக்கப்பட்ட பின்புதான் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவேண்டும் என்ற ஆணித்தரமான வேண்டுகோளினை மாகாணசபை அமர்வில் முன்வைத்தார்.




Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624966

Translate