வியாழன், 21 ஜனவரி, 2016

ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தல சிறிய திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க யாத்திரைத்தலமாக திகழ்ந்து கொண்டிருக்கும் ஆயித்தியமலை> தூய சதா சகாய அன்னை திருத்தலம் இலங்கை திருநாட்டில் தூய சதாசகாய அன்னைக்கென அர்ப்பணிக்கப்பட்ட முதல் தேவாலயமாகும்.

கடந்த 1954ம் ஆண்டு உலக மரியன்னை ஆண்டில் அருட்தந்தை. ஜோர்ஜ் வம்பேக் அடிகளார் ஓர் ஓலைக்குடிலை அமைத்து அதில் தூய சதா சகாய அன்னையின் படமொன்றினை வைத்தே இவ் ஆலயத்தினை ஆரம்பித்திருந்தார்.

அக்காலப்பகுதியில் மறைமாவட்ட ஆயராகப்பணியாற்றிய அதிவந்தனைக்குரிய இக்னேசியஸ் கிளெனி ஆண்டகை அவர்களே முதலாவது திருநாள் திருப்பலியினை நிறைவேற்றினார்.

1980 இற்கு முன்னர் இவ்வாலயத்திற்கு இலங்கையின் சகல பாகங்களிலிருந்தும் யாத்திரிகர்கள் வந்துசெல்லும் வழக்கம் இருந்தது. இதனால் வழிபாடுகள் யாவும் தமிழிலும், சிங்களத்திலும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இக்காலப்பகுதியிலே இது தேசிய யாத்திரைத் திருத்தலமாக அரசினால் பதிவுசெய்யப்பட்டது. அதேவேளை வெளியிடங்களிலிருந்து வருகை தந்த பக்தர்கள் ஆலய வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பையும் வழங்கிவந்துள்ளனர்.

அதேபோன்று தற்போதும் ஆலய விழாவிற்கு இலங்கையின் அனைத்து பாகங்களிலும் இருந்தும் அதிகளவிலான அன்னையின் பக்தர்கள் வருகை தருவதுடன், பெருந்திரளானோர் முன்னையைப்போன்றே ஆலயத்திற்கு யாத்திரையாக வருவதும் வழமையாகவே நடைபெற்றுவருகின்றது.

அன்னைக்கு வைத்த நேர்த்தியை நிறைவேற்றும் வண்ணம் ஆலய வளாகத்தில் சிறு குடிசை அமைத்து நவநாள் காலங்களில் ஆலயத்தினை பராமரிக்கும் செயற்பாடுகளில் அன்னையின் பக்தர்கள் ஈடுபட்டுவருவதுடன்> அன்னையை வழிபடுவதும் வழமையாகவே  காணப்பட்டுவருகின்றது.

இத்திருத்தலத்திற்கு வருகைதரும் அன்னையின் பக்தர்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய ஏற்பாடுகளையும் திருத்தல பரிபாலகராக பொறுப்பிலிருக்கும்  அருட்தந்தையர்கள் முற்கூட்டியே ஆயத்தங்களை மேற்கொண்டு கொடுப்பதும் வழமையாகவே இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் 2016ஆம் ஆண்டிற்கான அன்னையின் திருத்தல சிறிய வருடாந்த திருவிழா  பங்குதந்தை அருட்பணி ரீ.ஏ.ஜுலியன் அடிகளார் தலைமையில் நாளை  (27) புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

கொடியேற்றத்தினை தொடர்ந்து  மறுநாள் (28) வியாழக்கிழமை திருமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவல் ஆண்டகை அவர்களை வரவேற்கும் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து சிறப்பு  திருப்பலியும் இடம்பெறவுள்ளது.

தொடர்ந்துவரும்  நவ நாட்காலங்களில் தினமும் மாலை 4.30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து திருப்பலி, மறையுரை, அன்னையின் ஆசீர் என்பன இடம்பெறவுள்ளது.

30.01.2016 சனிக்கிழமை மறைமாநில ஆயர் பேரருட்தந்தை ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களினால் திருவருட்சாதன விழாக் கொண்டாட்டமும், சிறப்புத் திருப்பலியும் இடம்பெறவுள்ளது.

இறுதியாக 31.01.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு மறைமாநில குருமுதல்வர் அருட்தந்தை ஏ.தேவதாசன் தலைமையில் விசேட பெருவிழா கூட்டுத் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு திருப்பலியின் நிறைவில், ஆலய வருடாந்த திருவிழா   கொடியிறக்கத்துடன் நிறைவுபெறவுள்ளது.  



Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624977

Translate