-தீரன்-
இந்த நாட்டில் 'பொய் இல்லை இரகசியம் இல்லை' என்ற நிலையினை உருவாக்க வேண்டும். இந்த நாட்டில் உள்ள அனைத்துப் பிரஜைகளுக்கும் தகவல்களை பெற்றுக்கொள்ளும் உரிமை வேண்டும் என்ற கோரிக்கை இன்று வலுப்பெறத் தொடங்கியுள்ளது.
இலங்கையில் தகவல் அறியும் சட்டமூலத்தின் ஊடாக பொதுமக்களுக்கு இந்த நாட்டில் 'பொய் இல்லை இரகசியம் இல்லை' என்ற உண்மையை சொல்லவேண்டும் என்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றது.
தென்னாசியாவிலேயே தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை இறுதியாக கொண்டுவந்த நாடு இலங்கை என்ற செய்தி நாட்டில் உள்ள அனைவருக்கும் வேதனையான வெட்கப்படவேண்டிய விடயமாக உள்ளது.
இருந்தும் இன்று கொண்டுவரப்பட்டுள்ள இலங்கையின் தகவல் அறியும் சட்டமூலம் தற்போதைக்கு உலகின் 9வது இடத்தில் இருக்கின்றமை என்ற செய்தி ஆறுதலாக உள்ளது.ஐக்கிய நாடுகள் சபையினால் மனிதவுரிமைகள் சரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதனின் அடிப்படை உரிமையான இந்த தகவல் அறியும் உரிமையை இலங்கை கடந்த வருடம் தான் கொண்டுவந்துள்ளது.
உலகில் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த தகவல் அறியும் சட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டு இன்று உலகில் உள்ள அபிவிருத்தி அடைந்த அபிவிருத்தி அடையாத எல்லா நாடுகளிலும் இந்தச்சட்டம் அமுலில் இருக்கின்றது.
இந்தச் சட்டமானது உலகில் உள்ள 112 நாடுகளில் காணப்படுகின்றது.
தென்னாசியாலவிலேயே இந்த சட்டத்தை இறுதியாக கொண்டுவந்த நாடாக இலங்கையே இருக்கின்றது.
கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இந்த உரிமையை பெற்றுக்கொடுக்க சிவில் சமூகத்தினர் ஊடகவியலாளர்கள் மனிதவுரிமை அமைப்புக்கள் என பலரும் பல்வேறு போராட்டங்களை நடாத்தியிருந்தனர்.
கடந்த ஆட்சியில் பல சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டாலும் அதனை நடைமுறைப்படுத்த அந்த அரசாங்கங்கள் முயலவில்லை என்பதே உண்மை.
எமது நாட்டு மக்களுக்கு தகவல் உரிமையை வழங்குவதற்கான உரையாடல் 1993-1994 களில் தொடங்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டிலேயே முதன் முதலில் தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இருந்தும் அது நிறைவேற்றப்படவில்லை
கடந்த 20 வருடங்களாக இவ்வுரிமையை பெற முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் சட்டமூலமாக அங்கீகரிக்க எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது பற்றிய கருத்தாடல்கள் மேற்கொள்ளப்பட்டு சட்டமூல வரைவுகள் முன்வைத்த பல சந்தர்ப்பங்களிலும் தடங்கள் இருந்துகொண்டே இருந்தன. சுய நலமிகளினதும் அறிவீனர்களதும் கெடுபிடிகள் காரணமாகவும் பாராளுமன்றம் கலைக்கப்படல் மற்றும் ஆட்சி மாற்றம் காரணமாகவும் இழுபறி நிலையிலேயே இருந்தது.
இந்த நாட்டில் இன்றும் பல அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இந்த தகவல் அறியும் சட்டமூலத்தை கொண்டுவருவதற்கு விரும்பாத நிலையே காணப்படுகின்றது.
இலங்கையில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை நிறைவேற்ற தவறிய சந்தர்ப்பங்கள்
1993-1994 பொதுத் தேர்தல் – ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் ஊடக அடக்குமுறைக்கு எதிராக எழுந்த ஊடகவியலாளர்கள், சுதந்திர ஊடக இயக்கத்துள் தகவல் அறியும் உரிமை தொடர்பான உரையாடலை தோற்றுவித்தார்கள்.
1995 அப்போதைய ஊடக அமைச்சர் தர்மசிறி சேனநாயக்கா அவர்கள், ஊடக சுதந்திரம், தகவல் சுதந்திரம் தொடர்பாக ஆராய நீதியரசர் ஆர்.கே.டபள்யூ. குணசேகர தலைமையில் ஏழு பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்தார்.
1995 ஏப்ரல் 7 ஆர்.கே.டபள்யூ. குணசேகர தமது குழுவின் அறிக்கையை ஊடக அமைச்சருக்கு ஒப்படைத்தார்.
1996 மே 27 ஆர்.கே.டபள்யூ. குணசேகர Goonasekara Committee Report’இறுதி அறிக்கையை ஊடக அமைச்சருக்கு வழங்கியது. இவ் அறிக்கையில், தகவல் அறியும் உரிமை (Freedom of Information Act.) சட்டமாக மக்களுக்கு வழங்கப்படவேண்டும் என முதன்முதலாக பிரேரிக்கப்பட்டிருந்தது.
1996 இலங்கையின் சட்ட ஆணைக்குழு, தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலம் கொண்டுவரப்பட வேண்டும் என மாதிரி வரைவொன்றை வெளியிட்டது.
1998 ஏப்ரல் கொழும்பில் நடைபெற்ற வெகுஜன ஊடக மாநாட்டில் ஊடக சுதந்திரம் மற்றும் சமூகப்பொறுப்புணர்வு தொடர்பான கொழும்புப் பிரகடனத்தை வெளியிட்டது.
(Colombo Declaration on media freedom and social responsibility) இதில் தகவல் அறியும் உரிமையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க சட்டமூலம் கொண்டுவரப்பட வேண்டுமென பிரேரித்திருந்தது.
2000 ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அரசு புதிய யாப்பு சீர்திருத்தம் வரைவொன்றை முன்மொழிந்தது. அதில் அடிப்படை உரிமைகள் பகுதியில் தகவல் அறியும் உரிமை இணைக்கப்பட்டிருந்தது.
2003 சுதந்திர ஊடக இயக்கம், மாற்றுக் கொள்கைக்கான நிறுவனம் மற்றும் பல அமைப்புகள் இணைந்து தகவல் அறியும் உரிமைச் சட்டமூல வரைவொன்றை முன்வைத்தது. அது அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கையளிக்கப்பட்டது.
2004 பெப்ரவரி பிரதமர் ரணில் விகரமசிங்க அவர்களால் தகவல் அறியும் சட்டமூல வரைவு அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது. இருப்பினும், பாராளுமன்றத்திற்கு சமர்பிப்பதற்கு முன் 2004 மார்ச் மாதம் பாரளுமன்றம் கலைந்தது.
2006 ஏப்ரல் இலங்கையின் சட்ட ஆணைக்குழு இரண்டாவது முறையாகவும் தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூல வரைவை '‘Draft Freedom of information act -2006 Proposed by the Law Commission of Sri Lanka’வெளியிட்டது.
2009 அப்போதய பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மிலிந்த மொரகொட அவர்கள் தகவல் அறியும் சட்டமூல வரைவொன்றை முன்வைத்தார்.
2010 ஜூலை அப்போதைய எதிரக்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் தமது சுய முன்வரைவாக தகவல் அறியும் உரிமைச் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைத்தார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவர அதிகாரம் இல்லையென தடுக்கப்பட்டது.
2010 செப்டம்பர் 23 அப்போது எதிர்க்கட்சி அமைச்சராக இருந்த ஐ.தே.க பிரதித் தலைவர் கரு ஜயசூரிய அவர்கள் தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் முன்வைத்தார். அப்போது ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளராக இருந்த தினேஷ் குணவர்தன அவர்கள் தமது அரசு 6 மாதத்தில் இப்படியான ஒரு சட்டமூலத்தை கொண்டுவர இருப்பதாக தெரிவித்தார்.
2011 ஜூன் 21 மீண்டும் கரு ஜயசூரிய முன்வைத்தார். அதற்கு ஆளுங்கட்சி மறுத்ததோடு சட்டமூலம் கொண்டுவருதல் தொடர்பாக வாக்கெடுப்பொன்றும் நடாத்தப்பட்டது. சார்பாக 32 வாக்குகள் கிடைத்தது. 99 வாக்குகள் எதிராக இருந்ததால் விவாத்த்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது பகிஷ்கரிக்கப்பட்டது.
2015 ஜனாதிபதி பொது ஆபேட்சகர் மைத்ரிபால சிறிசேன அவர்கள் வெளியிட்ட தனது கொள்கைப் பிரகடனத்தில் தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலம் கொண்டுவருவதாக வாக்களிக்கப்பட்டது.
2015 ஜனவரி தகவல் அறியும் உரிமை சட்டமூலம் 100 நாட்களுக்குள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் என புதிய ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக பதவியேற்பின் போது தெரிவித்தார்.
2015 ஜனவரி 100 நாள் வேலைத் திட்டத்தில் தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கும் காலப்பகுதி குறிப்பிடப்பட்டிருந்தது.
2015 ஏப்ரல் 23 அரசியல் யாப்பின் 122 ஆம் சரத்தின் கீழ் அவசர சட்டமூலமாக பாராளுமன்றத்தில் சமர்பிக்க பிரதமர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தது.
2015 மே 15 19ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தத்தம் கொண்டிவரல். அதில் 14 அ (1) சரத்தில் தகவல் அறியும் உரிமை தொடர்பான யாப்புரீதியான அங்கீகாரம் வழங்கப்படல்.
2015 டிசம்பர் 21 தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலம் அரச வர்த்தமானி யில் வெளியிடப்பட்டது.
2016 மார்ச் 24 – பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக அவர்களால் தகவல் அறியும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்பித்தல்.
2016 மே 3 தகவல் அறியும் உரிமை சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பை சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
2016 ஜூன் 23 பாராளுமன்றத்தில் சட்டமூலம் தொடர்பான விவதாம் இடம்பெற்றது.
2016 ஜூன் 24 வாக்கெடுப்பு இன்றி திருத்தங்களுடன் சபையின் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட்டது. அதன் பிரகாரம், குறித்த சட்டமூலத்தில் தகவலைப் பெற இருக்கும் உரிமைக்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கவும் தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவினை ஸ்தாபிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.
இருந்தும் இவற்றையெல்லாம் தாண்டி கடந்த 2015 ஆண்டு டிசம்பர் மாதம் 02ம் திகதி அமைச்சரவை அங்கீகாரத்தின் ஊடாக 2015 டிசம்பர் மாதம் 18ம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இலங்கையின் தகவல் அறியும் சட்டமூலமானது 2016 ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தகவல் அறியும் உரிமையானது அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளபோதும் பாராளுமன்றத்தில் தகவல் அறியும் உரிமைக்கான சட்டமொன்றை நிறைவேற்றி அது நடைமுறைக்கு வந்த பின்னரே அந்த உரிமை பொதுமக்களுக்கு கிடைக்க கூடியதாக இருக்கும்.
அரசாங்கம் இதற்கான கால அவகாசத்தை கோரியுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து திணைக்களங்களும் இதற்காக தயார்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவல் அறியும் சட்டத்தை அழுல்படுத்துவதற்காக புதிதாக தகவல் உத்தியோகத்தர்களை நியமிக்கவுள்ளதாக அரசு கூறியுள்ளது.
அனேகமாக வெகுசன ஊடக அமைச்சினால் பொது வர்த்தமானியில் அறிவித்ததன் பின்னரே பொதுமக்கள் தகவலுக்கான உரிமை தொடர்பான விண்ணப்பங்களை பகிரங்கமாக அதிகாரசபைகளிடமிருந்து கோர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நடைமுறை தற்போதிருந்து 2017 ஆகஸ்ட் மாதம் 04ம் திகதிக்கிடையில் நடைபெறலாம் எனவும். அவ்வாறு நடைபெறாவிடின் 2017 ஆகஸ்ட் மாதம் 04ம் திகதிக்குப் பின்னர் பகிரங்க அதிகாரசபைகளிடமிருந்து தகவலுக்கான கோரிக்கைகளை பொதுமக்கள் கோர முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
தகவல் அறியும் ஆணைக்குழு நியமனம்
இலங்கையின் தகவலுக்கான உரிமை ஆணைக்குழு என அழைக்கப்படும் ஒரு குழு ஸ்தாபிக்கப்படல் வேண்டும் எனவும் அவ் ஆணைக்குழுவானது, அரசியலமைப்புப் பேரவையின் விதப்புரை மீது ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஐந்து (05) ஆட்களைக் கொண்டமைந்தாதல் வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், வெளியீட்டாளர்கள், பதிப்பாசிரியர்கள் மற்றும் ஊடக ஆட்களின் ஒழுங்கமைப்புக்கள் மற்றும் வேறு சிவில் சமூக ஒழுங்கமைப்புக்கள் ஆகிய ஒவ்வொன்றினாலும் ஓராளை விதிந்துரைத்தல் வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அத்தோடு திறமையைப் பறைசாற்றி பகிரங்க வாழ்வில் தமக்கெனச் சிறந்த நிலையை ஏற்படுத்திக்கொண்ட ஆட்கள், அனுபவம் மற்றும் சட்டம், ஆட்சி, பொது நிர்வாகம், முகாமைத்துவம் முதலியோர் இவ்வாணைக்குழுவிற்கு நியமிக்கப்படுவர் எனவும் இவ்வாணைக்குழு பகிரங்க அதிகாரசபைகள் மற்றும் தகவல் அலுவலர்கள் ஆகியோரின் செயல்திறன்களை கண்காணித்தல் வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அனைத்து பகிரங்க அதிகாரசபைகளும் தகவல் அலுவல்களை நியமித்தல் வேண்டும். அவர்கள் தகவலுக்கான கோரிக்கையைக் கையாளுதல் வேண்டும். ஏதேனும் தகவலைப் பெற விரும்பும் எவரேனும் பிரசை தோதான தகவல் அலுவலருக்கு கோரப்படும் தகவல் பற்றிய விபரங்களை குறித்துரைக்கின்ற எழுத்திலான ஒரு கோரிக்கையைச் செய்தல் வேண்டும் எனவும்
தகவல் அலுவலர் உடனே, கோரப்பட்ட தகவலை வழங்க அல்லது கோரிக்கையை நிராகரிக்க முடிவு செய்ய வேண்டும் எனக்கருதும் போது கோரிக்கையானது நிராகரிக்கப்படும் போது, எக்காரணத்தினால் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதென்பதை தகவல் அலுவலர் கோரிக்கையை விடுத்த பிரஜைக்கு அறிவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தகவல் அலுவலரினால் தரப்பட்ட காரணங்களுடன் திருப்திப்படாத பிரசையொருவர், ஆணைக்குழுவிற்கு மேன்முறையீடு ஒன்றை முன்வைக்கலாம்.
ஆணைக்குழுவின் முடிவினால் இன்னலுறப்பட்ட பிரசையொருவர் அல்லது பகிரங்க அதிகாரசபை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அத்தகைய முடிபுக்கெதிராக மேன்முறையீடு செய்யலாம்.
தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கான 05 பிரதிநிதிகளை நியமிக்கும் பணி தற்போது நடைபெற்றுவருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
'பொய் இல்லை இரகசியம் இல்லை'
இதனிடைய குறித்த தகவல் அறியும் சட்டமூலம் குறித்த விழிப்புணர்வை சமூகமட்டத்தில் உள்ள சிவில்சமூக பிரதிநிதிகள் ஊடகவியலாளர்கள் திணைக்கள தலைவர்கள் பொதுமக்கள் என பலருக்கும் ஏற்படுத்தும் நோக்குடன் 'பொய் இல்லை இரகசியம் இல்லை' என்ற தொனிப்பொருளிளான நிகழ்வு ஒன்று அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்றது.
யுத்தம் மற்றும் சமாதானம் தொடர்பில் அறிகையிடும் அமைப்பின் நிதி பங்களிப்பில் நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு, ஓகான் நிறுவனம், ஊடக தொழிற்சங்க சம்மேளனம் என்பன இணைந்து நடாத்தியிருந்தன.
இன்நிகழ்வில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்தும் அதன் சாதக பாதக நிலை குறித்தும் சட்டத்தரணி ஜெகத் வன்னியாராட்சி விளக்கவுரைகளை வழங்கியிருந்தார்.
அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில் நாங்கள் இலங்கையில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த தகவல் அறியும் சட்டமூலத்தை எப்படியாவது நடைமுறைப்படுத்த வேண்டும் அவ்வாறு நடைமுறைப்படுத்தினால்தான் இந்த நாட்டில் உள்ள மக்கள் இந்தநாட்டில் என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்ளமுடியும். இதற்கு முன் வந்த பல சட்டங்கள் இந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவில்லை அவை அனைத்தும் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களினால் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது. அது போன்று இந்த சட்டமும் கிடப்பில் போடப்பட்டுவிடுமா? என்ற சந்தேகமும் எமக்கு உண்டு இருந்தும் சிவில் சமூகம் ஊடகவியலாளர்கள் மனிதவுரிமை அமைப்புக்கள் எல்லாம் இணைந்து அதற்காக போராடி அந்த உரிமையை மக்களுக்கு பெற்றக்கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இங்கு தற்போது கொண்டுவரப்பட்டுள்ள தகவல் அறியும் சட்டம் குறித்த விளக்கங்களும் வழங்கப்பட்டன.
தகவலுக்கான உரிமை
தகவலுக்கான உரிமை எனப்படுவது பொது அதிகாரசபைகளில் உள்ள பொது தகவல்களை கோருகின்ற அடிப்படை உரிமையாகும்.
பகிரங்க சபைகளானது நாட்டின் குடிமக்களின் நம்பிக்கைக்குப் பொறுப்பான பல தகவல்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒரு குடிமகனாக அவ்வாறான தகவல்களை அறிவது நம் ஓவொருவரதும் அடிப்படை உரிமையாகும். ஐப்பசி 4 ஆம் திகதி 2016 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 2016 ம் ஆண்டின் 12ம் இலக்க, தகவலுக்காக உரிமைச் சட்டமானது தகவல் அறியும் செயன்முறையை விளம்பி நிற்கின்றது.
இது குறித்த பகிரங்க சபையில் சாதாரணமாக ஒரு விண்ணப்பத்தை மேற்கொளும் செயன்முறையாகும்.
சாதாரணமான செயன்முறையின் கீழ் விண்ணப்பித்ததில் இருந்து அதிக பட்சம் 28 நாட்களுள் குறித்த தகவலை பெற்றுக்கொள்ள முடியும். (தகவலானது எண்ணிக்கையில் அதிகமாக அல்லது தொலைவிலிருந்து கொண்டுவரவேண்டுய தேவை இருப்பின் கால அவகாசமானது மேலும் 21 நாட்களாக நீடிக்கப்படலாம். )
தகவலுக்காக உரிமைச் சட்டம்
தகவலுக்கான உரிமைச் சட்டமானது ஐப்பசி 4 ஆம் திகதி 2016 ஆம் ஆண்டு அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. இது குடிமக்களின் தகவல் அறியும் அடிப்படை உரிமையின் விபரத்தை கூறுகின்றது.
இச்சட்டமானது அரசியலமைப்பில் அதன் 14(அ) என்னும் உறுப்புரையில் தகவலைப்பெற அணுகுதலுக்கான உரிமையை உத்தரவாதம் செய்வதுடன், தகவலைப்பெற அணுகுதலுக்கான உரிமைக்குப் பயன்கொடுப்பதன ;மூலம்
பகிரங்க அதிகாரசபைகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறும் பண்பாட்டைப் பேணிவளர்த்து அதன் மூலம் இலங்கை மக்கள் ஊழலை எதிர்த்து நிற்றல் மற்றும் பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் நல்லாட்சியை மேம்படுத்துதல் ஊடாக முழுமையாகப் பங்கேற்கக்கூடியதும் நாட்டின் பொது வாழ்வில் தீவிரமாகப் பங்கேற்கக் கூடியதுமாகவிருக்கும் ஒரு தேவைப்பாடு உளதனால் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் யாப்பில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் இந்தச்சட்டம் அழுலுக்கு வந்தால் பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரும் உண்மையான தகவல்களை பெற்று நாட்டின் ஊழல் அற்ற நல்லாட்சிக்கு துணைநிக்கவேண்டும்.
ஒருவேளை இந்த சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்பட தவறினால் அந்த சட்டத்தை பெற்றுக்கொள்ள அனைவரும் போராடுவோம் இந்த நாட்டில் 'பொய் இல்லை இரகசியம் இல்லை' எல்லாம் எமக்கு தெரியும் என்ற நிலையை உருவாக்குவோம்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக