நல்லாட்சியிலும் தொடரும் மறைமுகமான ஊடக அடக்குமுறையை தடுத்து நிறுத்தி ஊடகசுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பினது சிறுபான்மையினர் பிரச்சினைகளை ஆராயும் விசேட பிரதிநிதி இஸாக் றீட்டாவிடம் வேண்டுகோளை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் விடுத்துள்ளது.இன்று படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான தினமான இன்று விசேட பிரதிநிதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இந்தவேண்டுகோளை விடுத்துள்ளனர்.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இன்று ஊடகவியலாளர் படுகொலை தினமாகிய இந்த நாளில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினருக்கான பிரதிநிதி அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரும் விடயம் யாதெனில்.இலங்கை நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டு ஒருவருடங்கள் தாண்டியுள்ள நிலையில் ஊடகவியலாளர்கள் மீதான அழுத்தங்களும் தாக்குதல்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.
வடகிழக்கில் உள்ள சிறுபான்மை இன ஊடகவியலாளர்கள் இன்றும் பாதுகாப்பு தரப்பினரால் கண்காணிக்கப்படுவதுடன் அவர்களுக்காக பணியாற்ற நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அத்துடன் அரச அதிகாரவர்க்கத்தின் அநீதிகளை வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதோடு பெலீஸ்விசாரணைகள் ஊடாகவும் இனந்தெரியாத நபர்களின் மூலமும் அச்சுறுத்தப்படுகின்றனர்.
ஊடகசுதந்திரத்திற்கான செயற்பாட்டுக்குழுவின் அமைப்பாளரும் ஊடகவியலாளருமான பேடிகமகே என்பவர் மீது தாக்குதல்.கிளிநொச்சி ஊடகவியலாளர் மீதான இராணுவ அச்சுறுத்தல் மட்டக்களப்பு சுயாதீன ஊடகவியலாளர் நிலாந்தன் மீதான பொலீஸ்விசாரணை போன்றவற்றுடன் மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்களை அரசாங்க அதிகாரிகள் மிக கடுமையாக விமர்சிக்கின்ற ஊடகங்களை எச்சரிக்கின்ற ஊடகவியலாளர்களை அவகௌரவப்படுத்தி புறக்கணிக்கின்ற பல சம்பவங்கள் இந்த நல்லாட்சி அரசில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது.
இந்த நாட்டில் பெரும்பான்மை இன ஊடகவியலாளர்களான லசந்த விக்கிரமதுங்க, ஏக்நெலிகொட ஆகியோரின் படுகொலை விசாரணைகளில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் கொலையாளிகளை பாதுகாப்பதாக அமைந்துள்ளதுடன் ஊடகவியலாளர்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டியவர்களே உயிர்களை பறித்துள்ளார்களா? என்ற ஐயத்தை உருவாக்கியுள்ளது.
இதேநேரம் பெரும்பான்மையின ஊடகவியலாளர்களின் படுகொலைகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நல்லாட்சி அரசு இது வரை ஒரு சிறுபான்மையின ஊடகவியலாளரின் படுகொலை விசாரணையை கூட ஆரம்பிக்கவில்லை.
இலங்கையில் இன்று வரை 43 ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர். இதில் 35 தமிழ் ஊடகவியலாளர்களும் 05 சிங்கள ஊடகவியலாளர்களும் 03 முஸ்லீம் ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர்.முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களின் ஆட்சிக்காலத்தில் 01 ஊடகவியலாளரும் ரணசிங்க பிரேமதாச அவர்களின் ஆட்சிக்காலத்தில் 02 ஊடகவியலாளரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் 13 ஊடகவியலாளர்களும் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 26 ஊடகவியலாளர்களும் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர்.
1985ம் ஆண்டு தொடங்கிய தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் 2010ம் ஆண்டுவரை தொடர்ந்துகொண்டே இருந்தது. இன்நிலையில் இலங்கையில் நடைபெற்றுவந்த படுகொலை ஆட்சியை ஊடகத்துறையின் பெரும்பங்குடன் முடிவுக்கு கொண்டுவந்த நல்லாட்சி அரசாங்கம் இன்றுவரை சிறுபான்மையின ஊடகவியலாளர்களின் படுகொலை விசாரணைனையில் அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை.
எனவே இந்த நாட்டில் சிறுபான்மையின ஊடகவியலாளர்களை படுகொலை செய்தவர்கள் தண்டிக்கப்படும்வரை சிறுபான்மையின ஊடகவியலாளர்களின் ஆழ்மனதில் பதிந்துகிடக்கின்ற அச்சமூட்டும் மனநிலை உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கான சுதந்திரமான ஊடக செயற்பாட்டிற்கு இடமளிக்காது என்பதோடு ஊடகவியலாளர்களை சுயகட்டுப்பாட்டை அதிகரிக்கவே செய்யும்.எனவே உடனடியாக மிக விரைவாக சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகவியலாளர்களின் படுகொலைகைகான விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும்.
அத்துடன் இலங்கையில் இன்றுவரை சுட்டுக்கொல்லப்பட்ட காணாமல்போன சிறுபான்மையின ஊடகவியலாளர்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியிடவேண்டும்.நல்லாட்சியிலும் தொடரும் மறைமுகமான ஊடக அடக்குமுறையை தடுத்து நிறுத்தி ஊடகசுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும். என்ற வேண்டுகோளை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் விடுக்கின்றது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக