திங்கள், 28 டிசம்பர், 2015

கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்தவுள்ள முச்சக்கரவண்டி பதிவுகளை உடன் நிறுத்துக் கோரி காத்தான்குடியில் ஆர்ப்பாட்டப் பேரணி

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் ஆகியோரை, கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்தப்படவுள்ள முச்சக்கரவண்டிகள் பதிவு எனும் சட்டத்தை தயவு செய்து நிறுத்துங்கள் எனக் கோரி காத்தான்குடி பிரதான வீதியில் இன்று (28) திங்கட்கிழமை ஆரப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெற்றது.

காத்தான்குடி முச்சக்கரவண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்த இவ் ஆர்ப்பாட்டப் பேரணி காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்தில் இருந்து ஆரம்பமாகி, மட்டக்களப்பு –கல்முனை காத்தான்குடி பிரதான வீதி வழியாக காத்தான்குடி பிரதேச செயலகத்தை சென்றடைந்து, கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் அமுல்படுத்தவுள்ள முச்சக்கர வண்டிகளை பதிவு செய்யும் நடைமுறையை இரத்து செய்யக் கோரி கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டுக்கு அனுப்புவதற்கான மஹஜர் ஒன்று காத்தான்குடி முச்சக்கரவண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்தின் சார்பாக அதன் தலைவர் என்.எம்.அபூபஸல், அதன் செயலாளர் எம்.எம்.எம்.சியாம் ஆகியோரினால் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மிலிடத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

மேற்படி ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்ட முச்சக்கரவண்டி சாரதிகள்'யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில்தானா உங்கள் சட்டங்களை அமுல்படுத்துவது, கிழக்கு மாகாண முதலமைச்சரே முச்சக்கர வண்டிகள் பதிவு எனும் சட்டத்தை நிறுத்த முன்வருவீர்களா?, வாழ்கை சுமை அதிகரித்து செல்லும் வேளையில் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு ஏன் இந்த சுமை, இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மட்டும் தனி சட்டமா? கிழக்கு மாகாண முதலமைச்சரே இது உங்களின் கவனத்திற்கு, கிழக்கு மாகாணத்தில் தொழில் புரியும் முச்சக்கரவண்டி சாரதிகளின் வருமானம்தானா, கிழக்கு மாகாண சபைக்கு தென்பட்டது, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களே! இது போன்ற சட்டங்களை இரத்துச் செய்ய கிழக்கு மாகாணத்தில் குரல் கொடுப்பீர்களா?, கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்தப்படவுள்ள முச்சக்கரவண்டி பதிவுகளை உடன் நிறுத்து' போன்ற தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளிளான வாசங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்ற பகுதிகளில் காத்தான்குடி பொலிசார் உட்பட போக்குவரத்து பிரிவு பொலிசார் ஆகியோர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.


























Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624964

Translate