தற்போது பருவப்பெயர்ச்சி மழை என அழைக்கப்படும் மாரிகாலம் கிழக்கில் தொடங்கியுள்ளதால் மாரிகாலத்தில் குறுகியகால பயிர்ச்செய்கைகளில் கிடைக்கக்கூடிய உபஉணவுப்பயிர்களான நிலக்கடலை, சோளம், மரவள்ளிக்கிழங்கு போன்ற தானியங்கள் கிழக்கு மாகாணத்திலுள்ள சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளன.
கிழக்கில் தமிழர்கள் செறிந்து வாழும் மட்டக்களப்பு,அம்பாரை,திருகோணமலை மாவட்டங்களிலுள்ள சேனைப்பயிர்ச் செய்கை கிராமங்களில் பயிரிடப்பட்டு வந்த உபஉணவுகளே இவ்வாறு சந்தைகளுக்கு விற்பனைக்கு வந்துள்ளன. தொழில் முயற்சியில் ஈடுபடும் பெண்களே இவ்வாறு கிழக்கில் நடைபாதையோரங்களில் விற்பனையில் ஈடுபட்டு வருவதை காண முடிகின்றது.
நிலக்கடலை ஒரு கொத்து நூறுரூபாய்க்கும்,பத்து சோளன் நூறுரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.மட்டக்களப்பில் நிலக்கடலை தற்போது ஒருகொத்து நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் நாற்பது ரூபாய்வரை குறையவும் வாய்ப்புக்கள் உள்ளதாக பயிர்ச்செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாவலடி, கேணிநகர், வாகரை பிரதேச செயலாளர் பிரிவுகள், செங்கலடி, கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இவ்வாறு உபஉணவுகள் உற்பத்தி செய்யப்பட்டு மாவட்டந்தோறும் ஓட்டமாவடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு, ஏறாவூர், காத்தான்குடி போன்ற பிரதேசங்களில் உள்ள சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
0 facebook-blogger:
கருத்துரையிடுக