சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின கொண்டாட்டம் புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நடைபெற்றது.
புதன்கிழமை காலை 8.45 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு இலங்கையை ஊழலற்ற நாடாகக் கட்டியெழுப்புவது தொடர்பான உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.
அதனையடுத்து மேலதிக அரசாங்க அதிபரின் இத்தினத்துக்கான சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது.
இலங்கையை ஊழலற்ற நாடாக கட்டியெழுப்புவது தொடர்பாக அனைத்து அரசாங்க உத்தியோகத்தர்களிடையேயும் எண்ணக்கரு ரீதியாக மாற்றம் ஒன்றைத் தோற்றுவிக்கும் தேவைப்பாட்டினை வலியுறுத்தி டிசம்பர் மாதம் 09ஆம் திகதி அனைத்து அரசாங்க அலுவலர்களினதும் ஒத்துழைப்புடன் இந்த விசேட நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சித் திட்டமானது அரசாங்க நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளரது சுற்றறிக்கைக்கு அமைவாக அனைத்து அமைச்சுக்கள், மாவட்ட செலயகங்கள், பிரதேச செயலகங்கள், அரச கூட்டுத்தாபன மற்றும் நியதிச்சட்ட சபைகளிலும் இன்றைய நடத்தப்படுகின்றது.
2003 அக்ரோபர் 31ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் போது டிசம்பர் 09ஆம் திகதியை சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
ஆரம்பத்தில் இப்பிரகடனத்தை ஏற்றுக் கொண்டு 140 ஐக்கிய நாடுகளின் உறுப்புரிமை நாடுகள் ஒப்பமிட்டிருந்தன. 2015 டிசம்பர் வரை 178 நாடுகள் ஒப்பமிட்டுள்ளன. அந்த வகையில் 2003ஆம் ஆண்டு முதல் இவ்வருடத்துடன் 13 வருடங்களாக ஊழல் எதிர்ப்பு தினம் அனுஸ்டிக்கப்படுகிறது.
ஊழல் குறைந்த நாடுகள் தொடர்பான சர்வதேச ரீதியான பட்டியல் படுத்தலில் இலங்கை, இந்தியா, தாய்லாந்து, ஜமெய்க்கா உள்ளிட்ட 9 நாடுகள் 38 புள்ளிகளுடன் 85ஆவது இடத்திலும் 36 புள்ளிகளுடன் சீனா 100ஆவது இடத்திலும் உள்ளன.
டென்மார்க் 92 புள்ளிகளுடன் முதலாவது இடத்திலும், நியூசிலாந்து 91 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், 89 புள்ளிகளுடன் பின்லாந்து 3ஆம் இடத்திலும் உள்ளன.
0 facebook-blogger:
கருத்துரையிடுக