புதன், 2 டிசம்பர், 2015

மட்டக்களப்பு நீதிமன்றில் பிள்ளையான்- தொடரும் விளக்கமறியல்


முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 


அவரை எதிர்வரும் 16ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம். அப்துல்லாஹ் இதன்போது உத்தரவிட்டார். 



இன்று காலை கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 



கடந்த 2005.12.25ம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டார். 



பிள்ளையான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுவதையொட்டி மட்டக்களப்பு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.



பிரதீப் மாஸ்டருக்கு விளக்கமறியல் நீடிப்பு


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என்று அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் ஆகியோரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் இந்தச்  சந்தேக நபர்கள் இருவரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கடந்த ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு, விசாரணை செய்யப்பட்டுவந்தனர். இந்நிலையில், 04.11.2015 அன்று மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, இவர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டிருந்தார். 

இன்று  புதன்கிழமை  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அப்துல்லாஹ் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 16ஆம் திகதிவரை இவர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம்  2005ஆம் மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில்; நத்தார் நள்ளிரவு ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate