கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் தாழ் நிலப்பகுதிகள் பல நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கடந்த இரு நாட்களாக தொடர்ச்சியாக மழைபெய்துவருகின்றது.
மழை காரணமாக தாழ் நிலப்பகுதிகள் பலவும் நீரில் மூழ்கியுள்ளன.
கிராண் – தொப்பிகலை பிரதான வீதியுடனான போக்குவரத்து அடை மழையினால் பாதிக்கபட்டுள்ளன.
இதன் காரணமாக கிராண் பிரதேச செயலாளர் பிரிவில் புலிபாந்தகல் மற்றும் தொப்பிகல பிரதேசத்தை அண்மித்த பகுதிகளுக்கான தரை வழிப் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதனால் இந்த பகுதிக்கான போக்குவரத்திற்கு படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
படுவான்கரை பிரதேசத்தின் வெல்லாவெளி, மண்டூர் வீதி, ஆனைக்கட்டிய வெளி ,கம்பியாறு வீதி மற்றும் மதுரங்குடலை பால வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதேவேளை வாழைச்சேனை பிரதேசத்தின் தாழ் நிலப்பகுதிகள் மற்றும் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
வீதிகளில் நீர் தேங்கிநிற்பதால் மக்கள் போக்குவரத்து செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இறால் பண்ணைக்கள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் இதனால் இறால் பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் அம்பாறை மாவட்டத்திலும் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால் விவசாய நிலங்கள், வீதிகள் மற்றும் தாழ் நிலப்பகுதிகள் பலவும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதேவேளை, நாட்டில் நிலவும் வானிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
எனினும் நாட்டின் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட சில பகுதிகளில் மழை பெய்யகூடும் என திணைக்களத்தின் வானிலை அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவிக்கின்றார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக