செவ்வாய், 27 அக்டோபர், 2015

அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி சிறப்புப் பூசை: யோகேஸ்வரன் அழைப்பு

கடந்த பல வருடங்களாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எமது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி அனைத்து இந்து அலயங்களிலும் விசேட பூசைகளை நிகழ்த்துமாறு  மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டியும் அவர்கள் தமது குடும்பங்களுடன் இணைந்து சந்தோசமாக வாழக் கூடிய சூழல் உருவாக வேண்டியும், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து இந்து அலயங்களிலும் எதிர்வரும் 2015.10.30ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று விசேட பூசைகளை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இரு சகாப்தங்களுக்கு மேலாக எமது தமிழ் உறவுகள் பல துன்பங்களுக்கு மத்தியில் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையிலும், சிலர் நீதி முன் வழக்கு நடாத்தப்பட்டிருக்கும் நிலையிலும், பலர் வழங்குகள் எதுவும் தாக்கல் செய்யப்படாத நிலையிலும் துன்பத்தை சிறைகளில் அனுபவித்து வருகின்றனர். இவர்கள் அனைவரினதும் விடுதலைக்கு எல்லாம் வல்ல இறைவன் வழிவகுக்க வேண்டும் என்பதை நோக்காக கொண்டே மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மாவட்டத்திலுள்ள 127 இந்து அமைப்புக்களின் கூட்டமைப்பான மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் இவ்விடயமாக மாவட்டத்திலுள்ள இந்து ஆலயங்களுக்கு மடல் அனுப்பியதுடன், வெள்ளிக்கிழமை மதிய பூசையில் சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்காக விசேட பிரார்த்தனை மேற்கொள்ளுமாறும் கோரியுள்ளார். இதற்காக ஆலயத்தில் பகுதி சார்ந்த பொது மக்களையும் இணைத்து கொண்டு இந்நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வேண்டியுள்ளார்.
அண்மையில் சிறையிலுள்ள அரசியல் கைதிகள் தமது விடுதலையை வேண்டி உண்ணா விரதம் இருந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களின் உறுதி உரையின் நிமிர்த்தமே உண்ணா விரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
இதன் நிமிர்த்தம் எதிர்வரும் 7ம் திகதிக்கு முன் விடுதலை செய்யப்படுவர் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate