சனி, 10 அக்டோபர், 2015

வெல்லாவெளி பிரதேசத்தில் பல்வேறு இழப்பினை ஏற்படுத்திய யானை மாட்டியது

கடந்த சில நாட்களாக போரதீவுப்பற்று பிரதேச  செயலக  பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அட்டகாசம் செய்துவந்த யானையை போரதீவுப்பற்று பிரதேச  செயலக  பிரிவுக்குட்பட்ட வேத்துச்சேனை  கம்பி ஆறுபிரதேசத்தில்  வைத்து  வன ஜூவராசிகள்  திணைக்கள அதிகாரிகள் இன்று (10) காலை பிடித்துள்ளனர்.

3 நாட்களாக   இப்பிரதேசத்தில்  தங்கி இருந்த அதிகாரிகள்   மேற்கொண்ட  நடவடிக்கையின்   பின்பே  இன்று  காலை  காட்டு யானை  பிடிபட்டது.

இந்த  யானையே  போரதீவுப்பற்று  பிரதேச  செயலக  பிரிவில்  கிராம வாசிகளை  கொன்றதுடன் அச்சுறுத்தி வந்தது  என  தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு  மாகாண  வன  ஜூவராசிகள் திணைக்களத்தின் மிருக வைத்தியர் நிகால்  புஸ்பகுமார  தலைமையிலான   விசேட  வைத்தியர்குழு மற்றும்  வன  ஜூவராசிகள்   திணைக்கள 18 அதிகாரிகள், மேற்கொண்ட  நடவடிக்கையின் போதே   யானை  அகப்பட்டது. இந்த  யானை 40 வயதுடையது  எனவும் 4 தொன் எடையுடையது எனவும்வைத்தியர்  நிகால்  தெரிவித்தார்.

யானை   மருத்துவ  சிகிச்சைகளின்  பின்பு  ஹொறவப்பொத்தானை யானைகள் சரணாலயத்துக்கு  கொண்டு செல்லப்பட்டது.

கடந்த  5ஆம்  திகதி  போரதீவுப்பற்று  பிரதேச  செயலகத்தின்  முன்பாக  யானைகளின்;  அட்காசம்  தொடர்பாக  நடவடிக்கை  மேற்கொள்ளுமாறு 15 கிராமத்தை சேர்ந்த  மக்கள்  8 மணிநேரம்  வீதி  மறியல்  போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வனஜீவள பாதுகாப்பு அமைச்சர் வழங்கிய  3  தீர்வு  அடங்கிய  வாக்குறுதியை  அடுத்து ஆர்ப்பாட்டம்   கைவிடப்பட்டது.

கடந்த  8  நாட்களாக  போரதீவுப்பற்று  யானைகளின்  அட்டகாசம் தொடர்பாக  வனவள பாதுகாப்பு  அமைச்சர் காமினி   ஜயவிக்கிரம  பெரேராவுடன் ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி இணைப்பாளர் சோ.கணேசமூர்த்தி தொடர்புகொண்டு   நிலைமைகளை  தெரியப்படுத்தியதன் அடிப்படையில் வனஜூவராசிகள் திணைக்கள  பணிப்பாளர்  நாயகம்  இற்கு  உடனடி  நடவடிக்கை  மேற்கொள்ளுமாறு  உத்தரவிட்டிருந்தார்.

இன்று காலை போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்னம் தலைமையில் குறித்த யானையினை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த ஒரு மாத காலப்பகுதியில் இப்பகுதியில் குறித்த யானையின் தாக்குதல்கள் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகம் பிரதேச செயலாளர் வில்வரெட்னம் தெரிவித்தார்.

பொதுமக்களை தொந்தரவுக்குள்ளாக்கும் வேறு யானைகள் இருந்தாலும் அவற்றினையும் அப்புறப்படுத்தவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இது தொடர்பில் பொதுமக்கள் உரிய தகவல்களை தரவேண்டும் என்றார்.


















Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1625102

Translate