மட்டக்களப்பு வாகரை பிரதேசத்திலுள்ள காயங்கேணி கிராமத்தில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் நாளாந்தம் சேதமடைந்து வருவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
2004 ஆம் சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்ட காயங்கேணி கிராமத்தைச் சேர்ந்த 150 குடும்பங்களுக்கு 2007 ஆம் ஆண்டு யூலை மாதம் புதிய வீடுகள் கையளிக்கப்பட்டதாகவும் ஆனால் கதவுகள், யன்னல்கள், வீட்டுக் கூரைகள் உடைந்து விழுவதாகவும் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டு இடிந்து விழுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு நூறு வீடுகள் சேதமடைந்துள்ளது என்றும் அவற்றில் பல வீடுகள் பாவிக்க முடியாத நிலையில் பழுதடைந்துள்ளதாகவும் உடைந்து விழும் வீடுகளில் வாழ்வதற்கு மக்கள் அச்சமடைவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் உடைந்து விழும் வீடுகள் சேதமடைந்துள்ளமையினால் மின்சார ஒழுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் உள்ளதாகவும் இதனால் இரவில் நிம்மதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது என்றும் மக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் வீடுகளை கட்டிக்கொடுத்த அரசசார்பற்ற நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது வட கீழ் பருவபெயர்ச்சி காற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதனால் மேலும் பல வீடுகளின் கூரைகள் சேதமடையும் நிலையில் உள்ளதாகவும் இதனால் அந்த வீடுகளை விட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளதாகவும் எமது மட்டக்களப்பு பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக