சனி, 19 செப்டம்பர், 2015

சர்வதேச விசாரணையை இழுத்தடிக்காமல் உடனடியாக ஆரம்பிக்குமாறு மட்டு.மறை ஆயர் வலியுறுத்தல்

சர்வதேச விசாரணையினை தொடர்ந்தும் இழுத்தடிக்காமல் தொடர்ந்தும் குழுக்களை அமைத்து காலத்தினை நேரத்தினை போக்காமல் உடனடியாக இந்த விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என மட்டக்களப்பு,அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.


இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்ற 49வது உலக தொடர்பாடல் தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

சர்வதேச விசாரணை என்பது எமக்கு மிகவும் அவசியமானது.கடந்த 30வருட யுத்தத்தின்போதும் யுத்தத்தின் இறுதிக்கட்டத்திலும் நடைபெற்ற கொடுமைகள் வன்முறைகள் தொடர்பில் விசாரணைகள் நடாத்தப்படவேண்டும்.

கடந்த காலத்தில் இந்த நாட்டில் நடாத்தப்பட்ட உள்ளக விசாரணைகள்,ஆணைக்குழுக்கள் எந்தவித நீதியையும் பெற்றுத்தரவில்லை.அதனால்தான் எங்கள் குரல் சர்வதேசத்திற்கு கேட்கவேண்டும். ஜெனிவாக்கு கேட்கவேண்டும் என்பதற்காக இந்த சர்தேச விசாரணையினை கேட்டுக்கொண்டோம்.இதற்கான கோரிக்கையினை அனைவரும் ஒன்றுபட்டு தெரிவித்தோம்.

சர்வதேச விசாரணை இந்த நாட்டுக்கு தேவை. அதனை ஜெனிவா அங்கீகரித்துள்ளது.செயலாளர் நாயகம் இது தொடர்பில் ஆற்றிய உரை எங்களை கவர்ந்தது.இரண்டு தரப்பினரும் குற்றம் புரிந்துள்ளனர்.இதற்கு சர்வதேச மட்டத்தில் விசாரணைகள் நடைபெறவேண்டும் என்பதை அவர் புரிந்துகொண்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வுபெறவேண்டும்.எத்தனையோ தாய்மார்கள் கண்ணீர்வடித்துக்கொண்டுள்ளனர்.அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும்.எத்தனையோ இளைஞர்கள் இன்னும் சிறைகளிலேயே பல ஆண்டுகளாக அடைத்துவைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் விடுதலைசெய்யப்படவேண்டும்.இவ்வாறான பல காரணங்களினால்தான் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையினை நாங்கள் வலியுறுத்தி கூறிவருகின்றோம்.



இதனை தொடர்ந்தும் இழுத்தடிக்காமல் தொடர்ந்தும் குழுக்களை அமைத்து காலத்தினை நேரத்தினை போக்காமல் உடனடியாக இந்த விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என இங்கு வலியுறுத்தி கூறவிரும்புகின்றேன்.இதனையே அனைத்து மக்களும் விரும்புகின்றனர்.இதுவே ஜேசு கிறிஸ்து கொண்டுவந்த செய்தியாகும்.உண்மை,அன்பு,நீதி.நீதி நிலைநாட்டப்படவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்படாதவர்கள் என்று பார்க்காமல் அனைவரையும் இணைத்ததாக இந்த விசாரணை செய்யப்படவேண்டும்.அனைவருக்கும் நீதிகிடைக்கவேண்டும்.
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624977

Translate