திங்கள், 31 ஆகஸ்ட், 2015

வெருகல் பகுதியில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையிலான மோதலில் எட்டுப்பேர் காயம் -இருவர் கைது

திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பூமரத்தடிச்சேனைக் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் பொலிஸார் பொதுமக்கள் என எண்மர் காயமடைந்தும் இருவர் கைதுசெய்யப்பட்டுமுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள பூமரத்தடிச்சேனைக் கிராமத்தில் நீண்டகாலமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வோர் தொடர்பாக தமக்கு தகவல் கிடைத்ததின் பேரில் அவர்களைக் கைது செய்யும் நோக்கோடு பொலிஸார் குறித்த கிராமத்திற்குச் சென்றுள்ளனர்.

எனினும், அங்கு குறித்த கள்ளச்சாராயம் தயாரித்து விற்பனை செய்யும் வீட்டாரும் அவர்களின் உறவினர்களும் பொலிஸார் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதில் முன்னதாக ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார்.

இதன் பின்னர் சேருநுவர பொலிஸ் நிலையத்திலிருந்து உதவிக்கு வரவழைக்கப்பட்ட பொலிஸார் மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் குறித்த கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் குடும்பத்தவரும் உறவினர்களும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன் பின்னர் குழப்பத்தைக் கட்டுப்படுத்த இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

பொலிஸ் வாகனத்திற்கும் சிறிது சேதம் ஏற்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த 4 பொலிஸார் சேருநுவர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
சம்பவத்தில் காயமடைந்த பொதுமக்களான மூன்று பெண்களும் ஒரு ஆணும் வெருகல் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்கள்.

கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததோடு கலகம் விளைவித்து பொலிஸார் மீது தாக்குதலும் நடத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் காயமடைந்து சிகிச்சை பெற்ற நிலையில் பெண்ணொருவரும் அந்தப் பெண்ணின் சகோதரனும் கைது செய்யப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பற்றிய விசாரணைகளைத் தாம் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.



கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் மேற்படி குடும்பத்தாரிடம் பிரதேச செயலாளர், கிராம சேவகர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட அதிகாரிகள் ஏற்கெனவே நேரடியாகச் சென்று சட்டவிரோத கள்ளச்சாராய தயாரிப்பு மற்றும் விற்பனை சம்பந்தமாக விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624982

Translate